மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தங்களை அன்போடு வரவேற்கிறது........

Monday, January 24, 2011

கருணாநிதியை எதிர்த்து போட்டி - சீமான் பேட்டி

கருணாநிதியை எதிர்த்து போட்டி - சீமான் பேட்டி


தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டார். முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா என்று கேள்விக்கு நடக்கலாம் என்று அவர் கூறினார்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படையையும்,இலங்கை அரசையும் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் சீமான். ஆனால் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து சீமான் விடுதலையாகிறார். இன்று காலை அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட் உத்தரவு வராததால் சீமான் விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் கோர்ட் உத்தரவைப் பெற்று வந்து சிறையில் ஒப்படைத்தார். அதன் பின்னர் பிற்பகல் இரண்டரை மணியளவில் சீமான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு சிறை வாசலில் நாம் தமிழர் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கூடி வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இயக்குநர் பாலா, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், இயக்குநர் கெளதமன், பேராசிரியர் தீரன், மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் சீமானை வாழ்த்தி வரவேற்றனர்.

சீமானை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். ஏராளமான பத்திரிக்கையாளர்களும் குழுமியிருந்தனர். இருப்பினும் யாரையும் சிறை வளாகத்திற்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை.

மாறாக, பத்திரிக்கையாளர்களாகவே இருந்தாலும் சிறைக்கு வெளியில்தான் நிற்க வேண்டும் என்று கூறி விட்டனர்.

இதனால் பத்திரிக்கையாளர்களும், நூற்றுக்கணக்கான நாம் தமிழர் அமைப்பின் தொண்டர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.

சிறையிலிருந்து வெளி வந்த சீமான் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கருணாநிதியை எதிர்த்து போட்டி - சீமான் பேட்டி
நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது.

இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்று கூறினார் சீமான்.

அப்போது ஒரு செய்தியாளர், தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?என்று கேட்டபோது, தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம் என்றார்.

மேலும் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடப் போவதாக தெரிவித்த சீமான், நான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். திமுகவை எதிர்த்து உங்களது கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என்றார் சீமான்.

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா? என்ற கேள்விக்கு, நடக்கலாம் என்று பதிலளித்தார் சீமான்.

அரசு மீது வழக்கு தொடருவோம்-சீமான் வக்கீல்:

சீமான் விடுதலை குறித்துஅவரது வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில்,

அராஜக கொடுங்கோல் அரசை எதிர்த்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது. விடுதலைக்கான உத்தரவு நீதிமன்றம் தந்தும், சீமானை விடுதலை செய்ய அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது.

பல முட்டுக்கட்டைகளை கடந்து, விடுதலைக்கான ஆணைகளை பெற்று வந்து நாங்கள் சிறையில் தந்துள்ளோம். அதிகாரிகளையும் தரவைத்தோம். சீமானை 5மாதம் சிறையில் வைத்தததற்காக தமிழக அரசு மீது வழக்கு தொடர உள்ளோம் என்றார் சந்திரசேகர்.

அதிமுக உடன் கூட்டணி ஏன் சீமான் விளக்கம்

அதிமுக உடன் கூட்டணி ஏன் சீமானின் புது விளக்கம்


ஒரு புலியும் ஒரு புலியும் சந்தித்தால்...’ வைகோவின் அலுவலகம் சென்று சீமான் சந்தித்ததைப் பற்றி ஊடக உலகத்தில் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழர் தாயகத்துக்காக போராடி வரும் வைகோவும், சீமானும் ஜனவரி 10ம் தேதி ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பின்... வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சீமான். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் அ.தி.மு.க.வை மீண்டும் சீமான் ஆதரிப்பது பற்றி தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்புகள் முளைத்திருக்கும் நிலையில், சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
வைகோவுடனான சந்திப்பு பற்றி...
நான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தபோது... அய்யா நெடுமாறனுடன் என்னை சந்தித்து தைரியம் கூட்டியவர் அண்ணன் வைகோ. நான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மனதார விரும்பியவர். என் விடுதலைக்காக பல கூட்டங்களில் முழங்கியவர். இது மரியாதை நிமித்தமான, அன்பு நிமித்தமான அண்ணன் - தம்பி சந்திப்பு.
என் விடுதலையை விரும்பிய பழ.நெடுமாறன் அய்யா, அண்ணன் திருமாவளவன், என்னுடைய வழக்குரைஞர்கள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். இது எல்லாமே அரசியலைத் தாண்டிய பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையிலான பாச சந்திப்புகள்தான்.
இரட்டை இலைக்கு ஆதரவு கேட்பேன் என சொல்லியிறுக்கிறீர்களே?
எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வவவேண்டும் என்பதல்ல.... யார் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான். தமிழகத்தில் ஆயிரம் மக்கள் பிரச்சனைகளையும் ஈழத்தில் லட்சக்கணக்கான எம் உறவுகள் நொடிக்கு நொடி சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த போதும் பதவி சுகத்துக்காக அவற்றையெல்லாம் அவதானிக்காமல் வந்துவிட்டது தி.மு.க.
போர் நடத்தியது காங்கிரஸ்... அதை பின்புறம் நின்று ஆதரித்தது, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துரோகம் செய்தது தி.மு.க. இந்த நிலையில்.... பதவி சுகத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த காங்கிரஸையும், கலைஞரையும் மீண்டும் அந்த பதவி சுகத்தை அனுபவிக்கவே விடக்கூடாது.
ஒருவேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால்... ‘ஈழத்தில் போரா?’ அப்படியன்று நடக்கவே இல்லை. அங்கே தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள். இலவச திட்டங்களை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்’ என்று ஊடகச் சர்வாதிகாரம் மூலம் உண்மையை மறைத்து.... ஈழ விவகாரத்தின் சுவடே தமிழ்நாட்டில் இல்லாமல் செய்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது.
என் இனத்தையே அழித்த காங்கிரஸ் கட்சியை நான் என் தாய்மண்ணிலிருந்து அழிக்க வேண்டும். அதனால்தான் காங்கிரஸ§க்கு எதிரான வலிமை மிக்க அணியை ஆதரிக்கிறோம். காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு.
நேற்றுவரை காங்கிரஸ் கூட்டணிக்காக பகிரங்கமாக முயற்சி செய்தவர் ஜெயலலிதா. இந்நிலையில், இனியும் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என நம்புகிறீர்களா?
இதில் எனக்கு என்ன பிரச்சனை? காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.வையும் எதிர்த்துதான் முழங்குவான் இந்த சீமான். என் பொது எதிரி காங்கிரஸ். அதோடு யார் சேர்ந்தாலும் எதிர்ப்போம். இதில் குழப்பமே இல்லை.... காங்கிரஸ§க்கு எதிராக இரட்டை இலை இல்லை.... வேறு எந்த இலை நின்றாலும் ஆதரிப்பேன். இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.
இன்று நாங்கள் சுபாஷ் சந்திரபோஸின் நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடைய வேண்டும். ஆனால், அதற்கான யுத்தம் நடத்துவதற்காக போதுமான வலிமை சந்திரபோஸிடம் இல்லை. அதற்காக அவர் வெள்ளையனை எதிர்க்கும் வெளிநாட்டு ராணுவத்தின் உதவியை நாடினார்.
எங்களுக்கு இப்போது அரசியல் களத்தில் தனியாக நின்று யுத்தம் நடத்துவதற்கான வலிமை இல்லை. அதற்காக யுத்தத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிற கோழைகள் அல்ல நாங்கள். நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில்... என் எதிரியை யார் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களோடு இணைந்து போராடுவதுதான் எங்கள் நிலைப்பாடு.
இதற்காக ஜெயலலிதா மனிதப் புனிதவதி என்றோ, சொர்க்கத்தின் ஆட்சியை தரப்போகிறார் என்றோ நான் போற்றிப் புகழவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்கும் முதல் ஆளாக சீமான்தான் இருப்பான்.
இலைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என என்னைக் கேட்டுக்கொள்ளும் நண்பர்கள்... வேறு என்ன செய்யலாம் என்று எனக்கு யோசனை சொல்லலாமே? தேர்தல் வரைக்கும் எங்கேயாவது வெளியூர் செல்லச் சொல்கிறார்களா? ‘பகலவன்’ படத்தை இப்போதே ஆரம்பித்து படப்பிடித்து நடத்து என்று சொல்லப் போகிறார்களா?
சிறை மீண்ட பின் தமிழக அரசின் மீது வழக்கு தொடுப்பதாக சொல்லியிருந்தீர்களே?
‘‘ஆம். அதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். நான் சிறையிலிருந்தது சட்டவிரோதம் என்று ஆனபிறகு, அந்த சட்டமீறலை செய்த தமிழக அரசு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
தவிர, சிறையிலிருந்து வெளிவந்த பின்னும் எனக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டிருக்கிறது தமிழக அரசு. சீமான் எங்கே பேசச் சென்றாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடக்க இருந்த உண்ணாவிரதத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்று தகவல் கிடைத்ததும், உண்ணாவிரதத்துக்கே அனுமதி மறுத்துவிட்டனர்.
நெய்வேலியில் என்னுடைய பொதுக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டபோது... ‘சீமான் நெய்வேலியில் பேசினால், மின் உற்பத்தி பாதிக்கப்படும்’ என்று அனுமதி மறுப்புக்கு காரணத்தை எழுதிக் கொடுத்திருக்கிறது காவல்துறை. இந்த அடக்குமுறையை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் எதிர்த்துத்தான் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்...’’
வெடித்து முடித்தார் சீமான்.

Sunday, January 23, 2011

வைகோவுடன் சீமான் சந்திப்பு

வைகோவுடன் சீமான் சந்திப்பு: கூட்டாக அளித்த பேட்டி




நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வைகோ கூறியதாவது:-

தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.

சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும்,நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் காங்கிரசுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இரண்டு வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மத்திய மந்திரி கபில்சிபல் எதுவுமே நடக்கவில்லை என்கிறார். அப்படியென்றால் ராசாவை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் களத்தை சந்திக்க வலுவான வஜ்ஜி ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள்.

சீமான் கூறியதாவது:- நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம். வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?

பதில்:- எங்களுடைய சந்திப்பு அண்ணன்-தம்பி சந்திப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டது.

கேள்வி:- கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா?

பதில்:- இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி.

கேள்வி:- கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறினீர்களே? போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியுமா?

பதில்:- காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சீமான் உங்களை வற்புறுத்தியுள்ளாரே என்று வைகோவிடம் கேட்டபோது கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.

இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்ஸ் பரபரப்பு

இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்ஸ் பரபரப்பு


இந்தியப் பெண்மணியாக மாறி விட்ட போதிலும், தனது இத்தாலிய குணாதிசயங்களை சோனியா காந்தி இன்னும் மறக்கவில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஷனீகரின் மனைவியான மரியா ஷ்ரீவர் கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

2006ம் ஆண்டு மரியா, இந்தியாவுக்கு வந்திருந்தபோது சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மரியாவிடம் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசினார் சோனியா. இந்தப் பேச்சை அப்போது உடன் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரகசியமாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த கடிதத்தை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சோனியாவை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார் மரியா. இதுகுறித்த தகவல்...

சோனியா காந்தி இந்தியப் பெண்மணியாகவே மாறி விட்டாலும் கூட அவருக்குள் இருக்கும் இத்தாலிய குணாதிசயங்கள் இன்னும் போகவில்ல. அவரது மேனரிசம், பேச்சு, விருப்பங்கள் உள்ளிட்டவற்றில் இத்தாலிய வாசம் வீசுகிறது. இருப்பினும் இதை தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும், உறவினர்களிடமும் மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் (ராஜீவ் காந்தி படுகொலை) அவரை மேலும் உறுதியாக்கியுள்ளது. அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி பொது வாழ்க்கைக்கு வருவதையும் அதுவே தடுத்து வந்தது. தனது மாமியார் குறித்தும், கணவர் குறித்தும் அவர் பேசும்போதெல்லாம் அவர் பெருகி வந்த உணர்ச்சிகளை அடக்க கடுமையாக போராடியதை உணர முடிந்தது.

தனது பேச்சின்போது தனது கல்யாணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது, தனது குடும்பமும், தனது கணவர் குடும்பமும் செய்த தியாகங்கள் ஆகியவற்றைக் குறித்து அவர் மிகுந்த உணர்ச்சிகரமாக பேசினார். பிரதமர் மன்மோகன் சிங்கின் வேலையில் பாதியை சோனியா செய்வதாகவே அவரது பேச்சுக்கள் உணர்த்துகின்றன.

தான் ராஜீவை கல்யாணம் செய்வதை பெற்றோர் கடுமையாக எதிர்த்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ராஜீவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார் சோனியா. நினைத்தபடி ராஜீவையே கைப்பிடித்தார்.

இந்திரா காந்தி மறைந்த பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நெருக்குதல் அதிகமாக இருந்தது. ஆனால் ராஜீவுக்கோ அல்லது சோனியாவுக்கோ அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லாமலேயே இருந்துள்ளது.

அரசியல் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே ராஜீவை கேட்டுக் கொண்டிருந்தார் சோனியா. ஆனால் ராஜீவ் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரானார். ஆனால் சோனியா தொடர்ந்து தனது பிடிவாதத்தை கடைப்பிடித்தார். வெளிச்சத்திற்கு வராமல் அடக்கமாக இருந்து வந்தார். அதையே அவர் விரும்பியும் இருந்தார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நான் ராஜீவுடன் சென்றேன் என்று கூறிய சோனியா, அரசியல் தொடர்பானவற்றிலிருந்து தான் விலகியே இருந்ததாக கூறினார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியாவின் பிடிவாதம் தளர்ந்தது. காந்தி குடும்பத்து பெருமையைக் காக்க அரசியலுக்கு வர தீர்மானித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. வலிமையான இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை ஏற்ற சோனியா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க முடிவு செய்தார். மிகப் பெரிய நெருக்குதல், தொடர் வலியுறுத்தல்கள், கட்டாயங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார் சோனியா. இருப்பினும் அப்போது தனது குழந்தைகளுக்கு தான் அரசியலுக்கு வருவதில் சற்றும் விருப்பமில்லை என்று தெரிவித்தார் சோனியா. இருப்பினும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் துணை இருப்போம் என்று அவர்கள் தங்களது ஆதரவை தாயாருக்குத் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் தான் சுற்றுப்பயணம் செய்திருப்பதாக பெருமையுடன் கூறிய சோனியா, பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பேசிப் பழகியதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை தன்னால் உணர, அறிய முடிந்ததாக கூறுகிறார்.

ஏன் உங்களைத் தேடி வந்த பிரதமர் பதவி வாய்ப்பை ஏற்காமல் விட்டீர்கள் என்ற கேள்விக்கு சோனியா பதிலளிக்கவில்லை. மாறாக, இதுகுறித்து நிறையப் பேர் நிறைய முறை கேட்டு விட்டனர். இருப்பினும் ஒரு நாள் நான் புத்தகம் எழுதும்போது நிச்சயம் இதுகுறித்து அதில் தெரிவிப்பேன் என்று மட்டும் கூறினார் சோனியா.

அதேசமயம், பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்காக தான் சற்றும் வருந்தவில்லை என்றும், அது தனக்கு ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை என்றும் கூறினார் சோனியா.

இந்தியப் பெண்கள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் மிகுந்த கவலை தெரிவித்தார் சோனியா. மேற்கத்திய நாடுகளில் இந்த அளவுக்கு பெண்களுக்குப் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் இந்தியப் பெண்கள் பல்வேறு விதமான, சிக்கலான, வினோதமான பிரச்சினைகளை சந்திப்பதாக அவர் கவலையுடன் கூறினார். சில அரசியல் கட்சிகள் பெண்களால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று கருதுவதாகவும் கூறினார் சோனியா.

மேலும், தனது பேச்சின்போது கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வட இந்தியாவை விட தென் இந்தியாதான் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும், முற்போக்கு உணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் சோனியா.

வைகோ

பிரதமரை வைகோ சந்தித்து பேசிய உணர்ச்சிகரமான விவாதம் உங்களுக்காக...!

பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஈழப் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரமதருடன், உணர்வுப்பூர்வமான வாதத்தில் ஈடுபட்டார் வைகோ. வைகோவின் கொள்கைப் பிடிப்பை இந்த சந்திப்பின்போது பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை (22.1.2011) காலை, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 9.55 மணிக்கே அங்கு வந்த பிரதமர், வருகின்ற வழியில் வாயிலில் நின்று,வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

நீங்கள் சொன்ன தமிழ்ப்பெண் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட்டார்என்று பிரதமர் கூறினார். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும், நேற்று, நீங்கள் உடனடியாகத் தொலைபேசியில் பேச நேரம் ஒதுக்கியதற்கும், இன்று காலையில்
நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன்என்றார் வைகோ.

உங்கள் தாயார், குடும்பத்தினர் எல்லோரும் நலமா? உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் நான் உங்கள் தாயாரைப் பார்த்தேனே?’ என்றார் பிரதமர்.

"அவர்கள் நலமாக இருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண ஆள். நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு கொண்டு இருப்பதற்கு நன்றி" என்றார் வைகோ.

நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழும் தலைவர்என்றார் பிரதமர்.

பிரதமரை விமர்சிக்கிறேன்- மன்மோகனை நேசிக்கிறேன்

நான் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன்,மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரைத்தான் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்', என்றார் வைகோ.

'உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்என்றார் பிரதமர்.

பாரக் ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெறுவார் என்பதை முதலிலேயே கூறியதுடன், கருப்பர்களின் துயர் மிகுந்த போராட்ட வரலாறையும் இந்த நூலில் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகத்தை, டெல்லி கபூர்தலா இல்லத்தில் வெளியிட பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தாம் ஏற்பாடு செய்தார். உங்கள் அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லாதான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்என்றார் வைகோ.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கேடு வரும்...

இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து விட்டது. இப்போது, செஞ்சீனம்அங்கே வலுவாகக் கால் பதித்து விட்டது.

எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும். ஆபத்து, தெற்கே இருந்துதான் வரப்போகிறது. அப்போது, இந்த சிங்கள அரசு, இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படப் போகிறது. அப்போதுதான் இந்திய அரசு இதை உணரும். ஈழத்தமிழர்கள் அங்கு வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களோடு இரத்த பந்த உறவு உள்ளதால், இந்தியாவுக்குத்தான் பக்கபலமாக இருப்பார்கள். இப்போது, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை வந்து சுடுவதும்,கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டதுஎன்றார் வைகோ.

தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்களே?’ என்றார் பிரதமர்.

குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே சென்று விடுகிறார்கள்என்றார் வைகோ.

அவர்களையும்தான் கைது செய்கிறார்கள்என்றார் பிரதமர்.

ஆமாம். ஆனால், ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடித்தது உண்டா? தாக்கியது உண்டா? துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா? ஒரு உயிரையாவது பறித்தது உண்டா? கிடையாது.

ஆனால், 1980 முதல், இதுவரை ஆயிரம் தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 பேர்கள் வரையிலும் கொன்று விட்டனர். 97 ஆம் ஆண்டு, ஆறுகாட்டுத்துறை என்கிற இடத்தில், நம் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் இலங்கு ஊர்தி ஒன்று தாழப் பறந்து வந்து குண்டு வீசியதில், ஆறு மீனவர்கள் துண்டுதுண்டாகச் சிதறிப் போனார்கள்.

இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இது தொடர்பான புகாரைக் கூட வாங்கவில்லை. நான், பிரதமர் குஜ்ரால் அவர்களை தில்லியில் சந்தித்து, இந்தியக் கடற்படையையும், இந்திய அரசையும் கண்டித்தேன். இந்தியக் கடற்படையோ,கடலோரக் காவல்படையோ, இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்கவோ, தமிழக மீனவர்களைக் காக்கவோ, ஒருதடவையாவது முயற்சித்தது உண்டா? கிடையாது. எனவே, தமிழக இளைஞர்கள் உள்ளத்தில், நாம் இந்தியாவின் குடிமக்கள்தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியக் கடற்படை,நமது கடற்படையா? என்ற எண்ணமும் எழுகிறது என்றார் வைகோ.

இலங்கை மறுப்பதாக கூறிய மேனன்!

அப்போது அங்கே இருந்த சிவசங்கர மேனன், ‘இப்போது கடைசியாக நடந்த துப்பாக்கிச் சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?’ என்றார்.

என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவதுதான் போடுகிறார்கள். சுடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், அவர்கள் இப்படித் திமிரோடு பொய் சொல்லுகிறார்கள்என்றார் வைகோ.

மேலும், பிரதமர் அவர்களே, ‘நீங்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்என்றார்.

'கடுமையான பிரச்சினைதான்'

இதை ஒரு கடுமையான பிரச்சினையாகக் கருதி, நாங்கள் இலங்கை அரசோடு பேசுவோம்என்றார் பிரதமர்.

அடுத்து, "தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு ஏற்படும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க, கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது. அது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், லண்டன் பொறியாளர் பென்னி குக் கட்டிய வலுவான அணை. ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தண்ணீர் உரிமை உண்டு. உச்சநீதிமன்றமும் அவ்வாறே தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கேரளத்தின் அச்சுதானந்தன் அரசு, பொய்யான தகவல்களைச் சொல்லி,அணையை உடைக்க முயற்சிக்கிறது.

இதோ, சிவசங்கர மேனன் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். தமிழகத்தில்,மலையாளிகளும் வாழ்கிறார்கள். கேரளத்தில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இன அடிப்படையில், நாங்கள் ஒரே குடும்பம்தான். தமிழ்நாட்டில் இருந்து, அரிசி,பருப்பு, பால், காய்கறி அனைத்தும் தருகிறோம்.

கேரளத்துக்கு கேடு

கேரளத்தில் சாகுபடிக்கு ஏற்ற நிலம் இல்லை. உணவு விளைச்சலைப் பெருக்க முடியாது. ஆனால், ஏராளமான நல்ல தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைப் பகிர்ந்து கொண்டால், இரண்டு மாநிலங்களும் வளமாக இருக்கலாம். முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது தமிழகத்துக்கும் கேடு; கேரளத்துக்கும் கேடு. பகையும் ஏற்படும். எனவே, மத்திய அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று, வைகோ தெரிவித்த கருத்துகளைப் பிரதமர் கனிவுடன் கேட்டார்.

வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வைகோவும், புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், ‘நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?’ என்று கேட்டனர்.

இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க.,காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அண்ணா தி.மு.க. அணி வெல்லும். அண்ணா தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லைஎன்றார் வைகோ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.